08-Jan-2009

நக்கிப்பிழைக்கலாம் ஊடகங்களே

தகவல் புரட்சியின் வளர்ச்சி அபரிவிதமானது.இருந்த இடத்தில் இருந்து கொண்டு எல்லா தகவல்களையும் பெரும் அளவுக்கு இன்று ஊடகம் வளர்ந்து விட்டது.ஆனால் அதன் மீதான நம்பிக்கை நேர்மாறாக உள்ளது.

உண்மையான தகவல்களை தேடி நாம் தான் புறப்பட வேண்டி உள்ளது.திரட்டிய உண்மை தகவல்களை கொண்டு சேர்ப்பதும் அதனை உண்மையென மக்களை நம்பவைப்பது அதனினும் கடினமாய் இருக்கிறது.புரட்டு ஊடகங்கள் பெரிதாய் தின்று கொளுத்து வளர்ந்த பன்றியை போல உள்ளன.

என்னதான் செய்கின்றன இந்த ஊடகங்கள் ?

பெரும்பாலான ஊடகங்கள்(தொலைக்காட்சி ஆகட்டும் ,செய்தி தாள் ஆகட்டும் ) கட்சி சார்பு உடையவை ஆகவே இருக்கின்றன.பெரும்பாலும் இவை அந்த கட்சிக்கு ஏற்புடைய செய்திகளையே வெளி இடுகின்றன .இதைகூட நம்மால் மக்களிடம் எடுத்து சொல்லிவிடலாம்.ஒருவகையான சிந்தனைகாவது இவர்கள் உட்படுவார்கள்.

செய்தித்தாள்களில் சில செய்திகளை பார்ப்போம்.கற்பழிப்பு செய்திகள் இல்லாமல் அவர்களால் இருக்கவே முடியாது.இந்த கற்பழிப்பு செய்தியினால் என்ன சொல்கிறார்கள் மக்களுக்கு??? மாறாக பாதிக்க பட்ட பெண்ணிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் சொல்லனா துயரத்தையும் மன அழுத்தத்தையும் தான் கொடுக்கிறார்கள்.அதிலும் ஊரு,தெரு எல்லா தகவலையும் கொடுத்து பெயரை மட்டும் மாற்றி விடுவார்களாம்.

நேற்று ஒரு செய்தித்தாளில் கடைசி பக்கத்தில் வந்த செய்தி ..புறா திருடிய 14 வயது சிறுவன் கைது.இதன் மூலம் இந்த செய்தித்தாள் சாதித்தது என்ன?மன அழுத்தம் கொடுத்தது.புறா மீது ஆசை கொண்டு தவறு செய்த சிறுவனை திருடன் என நிரந்தர பட்ட தாரியாக ஆக்கியது.

செய்தித்தாள்களில் கூட உண்மையை சொல்லும் அடையாளம் தெரியா செய்தித்தாள்கள் இருக்கவே செய்கின்றன.

தொலைக்காட்சி ஊடகம் ...கேவலம்.எல்லா தொலைக்காட்சியின் குடுமியும் ஏதோ ஒரு குடுமி இடம் தான் இருக்கும் போல.

சென்ற புத்தாண்டு ஆண்டு அன்று இவர்கள் காட்டிய செய்தியில் எனக்கு ஒரு சந்தேகம்..இவர்கள் அந்த பெண்ணிற்கும் ஆதரவாக செய்தார்களா இல்லை ..அந்த பெண்ணை படம் பிடித்து காட்டினார்களா?? எங்கெல்லாம் அந்த பெண் மீது கைபடுகிறதோ அங்கெல்லாம் ஒரு வட்டம் போட்டு ,அம்புக்குறி இட்டு....

குடுமிக்கு ஒன்று என்றால் குதித்து ஓடிவரும் வடநாட்டை மையமாக கொண்ட ஊடகங்கள் எங்கே போயின "கயர்லாஞ்சி" சம்பவத்தில்?இங்கே எத்துனை பேருக்கு கயர்லாஞ்சி குறித்து தெரியும் என்றால் ..ஒரு பெரும் கேள்விக்குறியை முன்னிறுத்தி அதனுள் அடைந்து கொள்ளலாம்.

சில நாட்களுக்கு முன்னாள் எந்த தொலைக்காட்சி ஊடகத்தை பார்த்தாலும் சட்டக்கலூரி சம்பவத்தை தான் காட்டினார்கள்.இதே ஊடகங்கள் திண்ணியம் மலம் திணிப்பு சம்பவத்தை பற்றி ஒரு துரும்பாவது கில்லிபோட்டார்களா? இல்லை மேலளவு கொலை வழக்கு குறித்து தான் பேசினார்களா?

இதற்க்கு இவர்கள் நக்கிப்பிழைக்கலாம்..

உண்மையை சொன்னால் அதை தான் செய்கிறார்கள்.உண்மை நிலவரத்தை தேடி நாம் தான் அலையை வேண்டும்..

ஊடகங்கள் எங்கே,யாருக்கு ஆதரவாய் இருகிறார்கள்.அவர்கள் யாரென நாம் தெரிந்து கொள்வதும்,அதை எடுத்து செல்வதும் அவசியமாய் இருக்கிறது .....

07-Jan-2009

வாழ்த்துங்கள் புதுவரவை...

பிறந்த நாள் : 25 -12 - 2008

எண்ணங்கள் மீது எனக்கு எப்போதும் அதீத நம்பிக்கை உண்டு.வலிமை பெரும் எண்ணங்கள் செயலாக மாறும் என்பது என் நம்பிக்கை.பலரின் எண்ணங்கள் ஒன்று கூடும் போது அந்த எண்ணம் வலுப்படும் என்பது என் எண்ணம்.

இப்பொழுது நான் வலை பூ எழுத்தாளர்கள் மற்றும் வாசிப்பாளர்களான உங்களிடம் வேண்டுவதெல்லாம் ஒரு வாழ்த்து எண்ணம்.இந்த பூமிக்கு புது வரவான ரோகன் உங்கள் எண்ணங்களால் வலுப்பெற உங்கள் வாழ்த்துகளை எதிர் நோக்குகிறேன்.

எல்லாருக்குமே குழந்தை என்பது எந்த ஒரு தருணத்திலும் ஒரு மட்டற்ற மகிழ்ச்சியை கொண்டுவரகூடியது.பாஸ்டின் டோனி ராய்,ரெக்ஸ்சி அருளானந்தம் ..இவர்கள் தான் ரோகனின் தந்தை மற்றும் தாய்.ரோகன் இவர்கள் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியை கொண்டு வந்து உள்ளான்.

உங்கள் வாழ்த்துக்கள் இவர்களை மேலும் மகிழ்ச்சி அடைய செய்யும்.இவர்களை மட்டும் அல்ல ..ரோகனின் ,அத்தை ,சித்தப்பா ,தாத்தாக்கள்,பாட்டிகள் என சகல உறவுகளையும்.

மற்றவர்களை மகிழ்விக்க தானே நாம் மனிதராய் பிறந்தோம்...உங்கள் எண்ணங்களால் வாழ்த்துக்கள் இந்த புதிய வரவை.

06-Jan-2009

49 - O வை பயன் படுத்துங்கள்.


நமது இந்திய அரசியல் நிர்ணயசட்டத்தின் 1969 ஆம் ஆண்டு சட்டத்தின் 49 -O பிரிவின் படி,ஒருவர் வாக்கு சாவடிக்கு சென்று தங்களுடைய அடையாளத்தை உறுதிப் படுத்திய பின்னர் "தான் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை" என்பதை அங்குள்ள அதிகாரியிடம் தெரிவித்து விட்டு விரல் அடையாள மை பெற்றுக்கொண்டு வரலாம்.

ஆம் இந்த விடயத்தை பற்றி கூடுதல் விவரம் அறிந்தவர்கள் மக்களுக்கு எடுத்து செ/சொல்லுங்கள்.இந்த வாய்ப்பை அரசியல் வா(வியா)திகள் மூடி மறைப்பதாக தெரிகிறது.

"யாருக்கும் ஓட்டளிக்க விருப்பம் இல்லை" என்று தெரிவிப்பதால் என்ன பயன்? ஒரு தொகுதியில் ஒருவர் 500 வாக்குகளில் வெற்றிபெறுகிறார் என கொள்வோம்.அதே தொகுதியில் இந்த 49 -O 500 விழுந்து இருந்தால் அத்தொகுதியின் தேர்தல் செல்லாது என அறிவிக்கபட்டு மறு தேர்தல் நடத்த படவேண்டுமாம்.அது மட்டும் அல்லாது அப்போது தேர்தலில் நின்றவர்கள் மறுபடியும் தேர்தலில் நிற்க முடியாது.ஏனெனில் மக்கள் அவர்களுக்கு எதிராக தங்கள் விருப்பமின்மையை அறிவித்து விட்டனர்.

இதன் மூலம் அழுகிய அரசியல் கட்சிகளை அப்புறபடுத்த முடியும்.ஓட்டளிக்காமல் இருப்பதுவும் ஓட்டளிப்பதை விட நல்ல நன்மைகளை நாட்டுக்கு செய்திடும்.எனவே உங்கள் வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.49 -O வை பயன்படுத்துங்கள்.

49-O வை பற்றி கூடுதலாக அறிந்தவர்கள் சொல்லுங்கள்.இதன் சாதக பாதகங்களை மேலும் அலசுவோம்.

பின் குறிப்பு :
இது மினஞ்சல் மூலமாக வந்த தகவல்.தகவல் அனுப்பிய அருண் பாண்டியன்,ஷ்யாம் அவர்களுக்கு எனது நன்றி.

தகவலின் மூலம் கீழே
http://yankandpaste.blogspot.com/2007/10/article-49-0-of-indian-constitution.html

05-Jan-2009

49 'O' எனக்கு புரியவில்லை..


நான் முன்னரே கூறி இருப்பது போல "இது எனக்கான..இல்லை இல்லை .நமக்கான,நாம் கற்பதற்கான வெளி.பகிர்தல்..பகிர்வதன் மூலம் புரிதல்,புரியவைத்தல்".எனக்கு கடந்த வெகு சில நாட்களாக வந்த சந்தேகங்களை சில கேள்விகளாக உங்கள் முன்னர் வைக்கிறேன்.

முதலில் நானும் 49 'O' விற்கு வாக்களிப்பதாக முடிவு செய்தேன்.இது நேற்று தற்செயலாக எனது நண்படன் பேசி கொண்டு இருக்கையில் தோன்றியது.

கேள்விகளுக்கு முன்னர் எனக்கு என்ன புரிதல் 49 'O' குறித்து என்பதை சொல்லி விடுகிறேன்.

அதாவது 49 'O' எந்த கட்சிக்கும் எனக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை.நான் ஒட்டு இடாமல், எனது ஓட்டை எவனோ ஒருவன் அபகரிக்க விடாமல் செய்ய ஒரு வழிமுறை.

சரி எனது சந்தேகங்களை கேட்கிறேன்.

1) இதே முறை வேறு எங்கும் புழக்கத்தில் உள்ளதா?
2) ஒரு வேளை அதிக பெரும்பான்யை விட 49 'O' வின் ஒட்டு அதிகம் ஆகிவிட்டால்?
a) அதை ஜானநாயக முறை படி நடப்பதாக சொல்ல படும் இந்த தேர்தல் மேலே எங்களுக்கு நம்பிக்கை இல்லை என எடுத்து கொள்ளலாமா?
3) வெறும் கள்ள ஓட்டுகளை புறக்கணிப்பது தான் இதன் வேலையா?

வெறுமனே பார்க்கும் போது எனக்கும் கூட இந்த கேள்விகள் மேலே எனக்கு லயிப்பு இல்லை.ஒரு வேளை 49 '0' அதிகமாக இருக்கும் பொருட்டு..

1) எத்தனை நாள் தான் நாம எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என தேர்ந்து எடுத்து கொண்டு இருப்பது?
2 ) ஆள் பலம் பணபலம் கொண்டு செய்வது தான் ஆரசியல் என முத்திரை குத்த பட்டபிறகு ..வெறுமனே சண்டை வைத்து தேர்ந்து எடுத்து விடலாமே?இன்னும் ஏன் இப்படி நம்மை நாமே ஏமாற்றி கனவு காணும் வேலை?
3 ) இப்படியே தான் இருக்கும்.அவன் நமக்கு செயுரதே கொஞ்சம் செய்து கொண்டு ..அவனுக்கு வேண்டிய பணத்தை மட்டும் சுருட்டி கொள்வான் என எத்துணை காலத்திற்கு நம்புவது?

மீண்டும் சொல்கிறேன் இந்த கேள்வி ரொம்ப கேவலமா தெரியலாம் ..ஆனாலும் எனக்கு வாக்கு உரிமை வாக்கு உரிமை அப்படி ஒன்னு இருக்குன்னு சொல்லுறாங்களே அது என்ன *** என தெரிந்து கொள்ள ஒரு ஆசை அவ்வளவே.


மேலும் வாசிக்க .." 49 - O வை பயன் படுத்துங்கள் "

http://karuvarayilirunthu.blogspot.com/2009/01/49-o_06.html

02-Jan-2009

ஒதுக்கப்படும் மனித இனம்..


திருநங்கைகள் குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தபோது கூடவே எழுதவேண்டுமா என்ற சந்தேகமும் ஒட்டிகொண்டது.ஆனாலும் எழுதிவிடுவது என்று முடிவு செய்து விட்டேன்.திருநங்கைகளுடன் ஒருபோதும் பேசியது இல்லை.அவர்கள் குறித்த ஒரு தெளிவும் என்னிடம் இல்லை.ஏதோ ஒருவகையான எண்ணம் எப்பொழும் அவர்களிடம் இருந்து என்னை விலக்கியே வைத்து இருக்கிறது.

இந்த எண்ணம் எங்கு இருந்து வந்தது?ஏழாம் வகுப்புவரை அப்படி ஒரு பாலிடம் குறித்த எந்த ஒரு விடயமும் தெரிந்தது இல்லை எனக்கு.சரியாக எட்டாம் வகுப்புதான் என்று நினைகிறேன்.அறிவியல் ஆசிரியர் முதன் முதலில் "அலி","ஒம்போது" என்ற பெயரில் எனக்கு அந்த பாலினத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் பிறகு அலியும்,ஒம்பதுவும் எங்களுள் ஒரு சகஜமான கெட்ட வார்த்தை ஆகி போகின.அதிகமாக எங்கள் ஊரில் நான் அவர்களை பார்த்தது இல்லை(பார்த்ததே இல்லை).பத்தாம் வகுப்பின் போது மேலும் திருநங்கைகள் குறித்த பேச்சு சகஜமாகி போனது.அவர்களின் உடலமைப்பு குறித்து பலரும் பேசிக்கொண்டு இருப்பர்.

கல்லூரி நாட்களில் தான் திருநங்கைகளின் பிழைப்பு குறித்து கொஞ்சம் நண்பர்கள் கூற கேட்டு இருகிறேன்.ஒருவித போக பொருளாக அவர்கள் பயன் படுவதாகவும்,தானும் பயன்படுத்தி இருப்பதாகவும் ஒரு நண்பன் கூறினான்.திருநங்கைகள் குறித்த வெறுப்பு சற்றே அதிகமானது.

சென்னைக்கு வந்த பிறகுதான் அதிகமாக திருநங்கைகளை பார்க்க நேர்ந்தது.முதல் முறையாக 47A பேருந்தில் அருகில்(எனக்கு முன் இருக்கையில்) திருநங்கையை பார்த்தேன்.இடை பட்ட காலங்களில்..சில வாசிப்புகளால் திருநங்கைகள் மீதான பார்வை சற்றே மாறி இருந்தது.

கடைகளில் காசுகேட்க வரும் போதும்,ரயிலில் காசு கேட்கும் போதும் பெரும்பாலும் கோவங்கள் எனக்கு வருவது உண்டு.கூடவே எந்த ஒரு அங்கீகாரமும் கொடுக்காத நாமும் தானே காரணம் என்ற எண்ணமும்.

இப்பொழுது அவர்கள் நிலைமை முன்னர் இருந்ததை காட்டிலும் பிறவாஇல்லை என்னும் நிலை.இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியின் எண்ணிலடங்கா ரசிகருள் நானும் ஒருவன்.காரைக்குடி(சரியாக நினைவில் இல்லை) பல்கலைகழகத்தில் அவர்களின் பாலினமும் சேர்க்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் "அதை" போய் எவன் பார்ப்பான் என இப்படிக்கு ரோஸ் நிகச்சியை புறக்கணிப்பவர்களையும் பார்த்து இருகிறேன் .இப்பொழுதும் கடைகளில் திருநங்கைகளை பார்க்கையில் என் கால்கள் விலகியே உள்ளன.இப்பொழுதெல்லாம் திருநங்கைகள் மனிதருள் ஒருவராய் தான் தெரிகிறார்கள்.திருநங்கைகளின் மனநிலையில் நான் எப்படி தெரிவேனோ..

எட்டாம் வகுப்பில் விதைக்க பட்ட விதை இன்று "விருட்சமாய் பாதி பட்டுப்போய்".அதே எட்டாம் வகுப்பில் இன்றும் ,அலிகளும்,ஒம்பதுவும் காற்றில் கலந்து கொண்டுதான் இருக்கின்றன .அவர்கள் மனதிலும்...

மரங்களுக்கும் மனதிருக்கும்...


மரங்களுக்கும் மனது இருக்கும் என்பது எனது சிறுவயது அபிப்பிராயம்.இன்றுவரை அந்த எண்ணம் மாறவே இல்லை.அப்பொழுது எனக்கு ஐந்து வயது இருக்கும்(சரியாக நினைவில் இல்லை) எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு சப்போட்டா வகை மா மரம் ஒன்று மொட்டுவைத்து சிறிய காய் ஒன்றை பூத்து இருந்தது.அதன் முதல் கரு...எனது அம்மாவை கூப்பிட்டு அதை காட்டும் பொருட்டு அழைத்து கொண்டே இருந்தேன்.எனது அம்மா வரவே இல்லை ....சிறிய காயை வெடுக்கென பறித்து விட்டேன் .கலைந்தது அதன் முதல் கரு.பின்னர் அந்த மரத்தை வெட்டும் வரை அது கருத்தரிக்கவே இல்லை.மரங்களுக்கும் மனதிருக்கும்.

அருகருகே இருக்கும் மரங்கள் காற்றில் ஆடும் பொழுது அவைகள் பேசிக் கொள்வதாகவே தோன்றும்.மரங்களும் நடப்பு பாராட்டும்.கிராம புறங்களிலும்,காடுகளிலும் எப்பொழுதும் மரங்கள் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன.குழந்தைகள் தான் பெரும்பாலும் மரங்களை உணர்ந்து கொள்கின்றன.

குழந்தைகளுக்கும் மரங்களுக்குமான நட்பு அலாதியானது.குழந்தைகள் மரங்களை தன் பிஞ்சு கரங்களால் அடித்து விட்டு தடவிகொடுக்கும்.சிறுவயதில் நான் செய்ததுண்டு.குழந்தையின் கை படும் மரங்கள் மனமுடைவதே இல்லை.

வளரும் குழந்தையாய் மனிதனுக்கும், மரத்திற்கும் எந்த இடத்தில் உறவுகள் மறைக்கின்றன என தெரியவில்லை.மனிதன் தான் மரத்தின் நலன் மறந்து விடுகிறான்.மரங்கள் பெரும்பாலும் மறப்பது இல்லை.தொழிற்சாலை கழிவு,வாகன புகை என எல்லாவகையிலும் தெரிந்தோ தெரியாமலோ மரங்களுக்கு எதிரியாகி விடுகிறான் மனிதன்.தெரிந்த பிறகும் தொடர்கிறான்.

நகர் புற மரங்களுக்கு, கிராம புற மரங்கள் கொஞ்சம் கொடுத்து வைத்தவை.சக மரங்கள் கொஞ்சமேனும் அருகில் உள்ளன.நடக்க முடியா மரங்கள் தூரத்து தோழனுக்கு செல்ல முடியா தகவல் அனுப்பியே நொத்து போய் விடுகின்றன.

பழம் தரும் மரங்களுடன் பழக மனிதர்கள் தான் இல்லை.கொஞ்சம் தோழமை மரங்களாவது தருவோம்.பாவம் மரங்கள் அவைகளுக்கும் மனம் இருக்கும்.

ஆளுக்கொரு வாகனம் வாங்க ஆரம்பித்து விட்டோம்.குழந்தைக்கு ஒரு மரமாவது வளர்ப்போமே..

01-Jan-2009

அழகான பக்கங்கள்

"ஊதா டவுசரும்,மை ஊரிய வெள்ளை சட்டையும் போட்டு ஒரு மஞ்சள் பையை தலைக்குமேல் சுமந்து கொண்டு..." பள்ளிக்கு செல்லும் எங்கள் பாதை பெரும்பாலும் இப்படி தான் இருக்கும்.கொஞ்சம் வசதி இருக்குமாயின் சதுர வடிவிலான தோள் பை.சட்டை பையை பெரும்பாலும் 10 பைசாவோ 5 பைசாவோ நிறைத்து இருக்கும்.கூடவே மனசில் சவ்வு மிட்டாய் தரும் தித்திப்பையும்.நடக்கும் போது லாவகமாக காற்றை பின்தள்ள துடுப்பென கைகள்.எந்த காலை பொழுதும் சோர்வாய் இருந்ததாய் நினைவே இல்லை.

பள்ளிகூட காலை விளையாட்டுகளால் எப்போதும் நிரம்பியே இருக்கும்.முடித்ததோ முடிக்காததோ வீட்டு பாடங்கள் எங்களை சஞ்சல படுத்தியதே இல்லை.எங்கள் புத்தக பை எங்கள் ஆசைகளை சுமந்து செல்ல "பெரிதாய் கொஞ்சமேனும்" இடம் வைத்தே இருந்தது.குண்டான க்ரேஸ் டீச்சரும்,ஒல்லியான சிரியபுஷ்பம் டீச்சரும் எப்போதும் பயம் கொடுத்ததே இல்லை.

அது எங்கள் ராஜியமாகவே இருந்தது.எங்களுகென கற்றலுக்கான பாதையும்,சுதந்திரமும் தெளிவாய் வடிவமைக்க பட்டு இருந்தன.நாங்கள் நாங்களாகவே இருந்தோம்.பாடங்கள் மட்டுமே கற்பிக்கபட்டன.உறவுகள் அனுபவிக்கபட்டன.கொய்யாவை காக்கா கடி கடித்து தரும் செந்திலாலும்,மிட்டாய் கொடுக்கும் புஷ்பாக்களாலும் அவைகள் வலு பெற்று இருந்தன.

மொத்தத்தில் அவை அழகிய பக்கங்களாய் இருந்தன.

மாறாக இன்று "கருப்பு நிற சூவும்,கழுத்தை இருக்கும் டையுமாய் ,முதுகை வளைக்கும் பையுடன் அழுத்தி வைக்க பட்ட மூட்டையாய்...." ஆட்டோவில் பள்ளிக்கான பாதை உள்ளது.ரூபாய் நோட்டுகளால் சட்டை பை நிறைந்து உள்ளது .காற்றை தள்ள கைகள் இருப்பது இல்லை மாறாய் தோளுக்கு துணையாய் பையை சுமந்து கொண்டு.

இப்பொழுதும் காலை பொழுது விளையாட்டுகளால் தான் நிரம்பி உள்ளது .ஆனாலும் முடிகபட்டதோ, முடிக்கபடாததோ ,திணிக்கப்பட்ட வீட்டு பாடங்கள் மனதை சஞ்சல படுத்திகொண்டே இருக்கின்றன.புத்தகபை காற்றை கூட அனுமதிக்க இடம் இல்லாமல் தவிக்கிறது.ஆசிரியர்கள் எப்பொழுதும் கனவில் கம்புடனே வருகிறார்கள்.நேரிலும்..

எல்லாம் திணிப்பாகவே உள்ளது.சுதந்திரம் அவர்களுக்கு இருப்பதே இல்லை .பெரும்பாலும் அவர்கள் அவர்களுடைய அப்பாகளாகவோ,அம்மாக்களாகவோ இருகிறார்கள் .அவர்களின் பிஸ்கட்டுகள் பெரும்பாலும் அவர்கள் திண்பதற்காகவே படைக்க பட்டு இருக்கின்றன . உறவுகள் நூல் பாலமாகவே....

அழுக்காக ஆக்கப்பட்ட பக்கங்கள்..