2 Jan 2009



மரங்களுக்கும் மனதிருக்கும்...


மரங்களுக்கும் மனது இருக்கும் என்பது எனது சிறுவயது அபிப்பிராயம்.இன்றுவரை அந்த எண்ணம் மாறவே இல்லை.அப்பொழுது எனக்கு ஐந்து வயது இருக்கும்(சரியாக நினைவில் இல்லை) எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு சப்போட்டா வகை மா மரம் ஒன்று மொட்டுவைத்து சிறிய காய் ஒன்றை பூத்து இருந்தது.அதன் முதல் கரு...எனது அம்மாவை கூப்பிட்டு அதை காட்டும் பொருட்டு அழைத்து கொண்டே இருந்தேன்.எனது அம்மா வரவே இல்லை ....சிறிய காயை வெடுக்கென பறித்து விட்டேன் .கலைந்தது அதன் முதல் கரு.பின்னர் அந்த மரத்தை வெட்டும் வரை அது கருத்தரிக்கவே இல்லை.மரங்களுக்கும் மனதிருக்கும்.

அருகருகே இருக்கும் மரங்கள் காற்றில் ஆடும் பொழுது அவைகள் பேசிக் கொள்வதாகவே தோன்றும்.மரங்களும் நடப்பு பாராட்டும்.கிராம புறங்களிலும்,காடுகளிலும் எப்பொழுதும் மரங்கள் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன.குழந்தைகள் தான் பெரும்பாலும் மரங்களை உணர்ந்து கொள்கின்றன.

குழந்தைகளுக்கும் மரங்களுக்குமான நட்பு அலாதியானது.குழந்தைகள் மரங்களை தன் பிஞ்சு கரங்களால் அடித்து விட்டு தடவிகொடுக்கும்.சிறுவயதில் நான் செய்ததுண்டு.குழந்தையின் கை படும் மரங்கள் மனமுடைவதே இல்லை.

வளரும் குழந்தையாய் மனிதனுக்கும், மரத்திற்கும் எந்த இடத்தில் உறவுகள் மறைக்கின்றன என தெரியவில்லை.மனிதன் தான் மரத்தின் நலன் மறந்து விடுகிறான்.மரங்கள் பெரும்பாலும் மறப்பது இல்லை.தொழிற்சாலை கழிவு,வாகன புகை என எல்லாவகையிலும் தெரிந்தோ தெரியாமலோ மரங்களுக்கு எதிரியாகி விடுகிறான் மனிதன்.தெரிந்த பிறகும் தொடர்கிறான்.

நகர் புற மரங்களுக்கு, கிராம புற மரங்கள் கொஞ்சம் கொடுத்து வைத்தவை.சக மரங்கள் கொஞ்சமேனும் அருகில் உள்ளன.நடக்க முடியா மரங்கள் தூரத்து தோழனுக்கு செல்ல முடியா தகவல் அனுப்பியே நொத்து போய் விடுகின்றன.

பழம் தரும் மரங்களுடன் பழக மனிதர்கள் தான் இல்லை.கொஞ்சம் தோழமை மரங்களாவது தருவோம்.பாவம் மரங்கள் அவைகளுக்கும் மனம் இருக்கும்.

ஆளுக்கொரு வாகனம் வாங்க ஆரம்பித்து விட்டோம்.குழந்தைக்கு ஒரு மரமாவது வளர்ப்போமே..

No comments: