19 Feb 2009



பெங்களூர் போராட்டம் முதல் முயற்சி!

பெங்களூரில் கடந்த ஞாயிறு(15/02/2008) ல் அண்ணன் அறிவழகன் தலைமையில் ஒரு போராட்டத்தை நடத்தி காட்டி இருக்கிறோம். கொஞ்சம் நிதானமாக திரும்பி பார்க்கும் பொழுது போராட்டத்தின் அடித்தளம் என்ன என்று சிந்திக்க தோன்றுகிறது. ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகளை தமிழனாக நமது எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் உங்களை போலத்தான் எங்களுக்கும் இருந்தது. எங்களிடம் உணர்வு இருந்ததே தவிர அது நடைமுறை சாத்தியமா என்ற ஐயமே எப்போதும் எங்களிடம் மிச்சம் இருந்தது. பெங்களூரில் தமிழ் உணர்வாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணமுடைய அண்ணன் அறிவழகன் அவர்கள் ஒரு சந்திப்பின் போது ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து இனப்படுகொலைக்கு எதிரான நமது உணர்வுகளை உலகிற்கு காட்ட வேண்டும் என்று அவரது எண்ணத்தை கூறினார். பெங்களூரில் தமிழ் உணர்வாளர்களை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதான பணி அல்ல. மேலும் தமிழினம் சார்ந்த போராட்டத்திற்கு அனுமதி பெறுவது அவ்வளவு எளிதானது இல்லை. படம் பார்க்க கிரிக்கெட்டு பார்க்க கூட்டம் கூடும் தமிழன் இன உணர்வு சார்ந்த போராட்டம் என்றால் 'நமக்கு எதுக்குடா வேண்டாத வேலை' என்பான். அப்படியே 'நம் இனத்துக்கு நாமில்லாமல் வேறு யார் போராடுவா?' என்று கேள்வி எழுப்பினால் நமக்கு 'தமிழ் திவிரவாதி' பட்டம் கண்டிப்பாக கிடைக்கும். அதனாலே நாங்கள் கையறு நிலையில் சில நாட்களை கழித்தோம். முத்துகுமரனின் தியாகம் முகத்தில் அறைந்தது போன்ற ஒரு பாதிப்பை எங்களிடம் ஏற்படுத்தியது. ஒரு உணர்வாளன் தன் உயிரையே கொடுத்து இருக்கிறான் நம்மால் ஒருநாள் போராட்டத்தை நடத்த முடியாதா
என்ற கேள்வியை எங்களுள் விதைத்து சென்றான் மாவீரன் முத்துகுமார்


உண்ணாநிலை போராட்டம் அவ்வளவு எளிதாக அனுமதி கிடைக்காது என்று சொன்ன அறிவழகன் அண்ணன் அறவழி போராட்டத்திற்கு அனுமதி பெறுவது சாத்தியம் என்ற உண்மையை சொன்னார். நாங்கள் சந்தித்த பொழுது நான் வெங்கடேசன் மாற்றும் அண்ணன் ஆகிய மூன்று பேர் மட்டுமே இருந்தோம். அறப்போராட்டத்தில் கண்டிப்பாக உணர்வாளர்களை ஒருங்கிணைத்து மாபெரும் வெற்றியாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. வெறும் மூன்றில் துவங்கிய எங்கள் பயணம் அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி நகர துவங்கியது. அறிவழகன் அண்ணன் போராட்டம் குறித்த இழையை போட்ட பின்னர் சிறிது சிறிதாக ஆதரவு பெருகியது. உடனுக்குடன் எங்களுக்கு அழைப்பு விட்டு போராட்டத்தை எப்படி நடத்துவது என்று பலவாறு முடிக்கிவிடும் பணியை அண்ணன் பார்த்துக்கொண்டார். நிகழ்சி எப்படி நடத்துவது என்ற கூட்டம் அடிக்கடி நடந்து கொண்டே இருந்தது. சந்திப்பின் போது வரும் தோழர்களின் எண்ணிக்கை கூடிகொண்டே இருந்தது.வேல்முருகன் மோகன் மணிமாறன் தமிழ்வேந்தன் எழில் என்று உணர்வாளர்களின் கூட்டம் போராட்டத்தை புது உத்வேகத்துடன் நகர்த்தியது. அலைபேசிகளின் வாயிலாக போராட்டத்திற்கான ஆதரவுகளை நண்பர்கள் தெரிவித்தார்கள். பதாகைகள் தட்டிகள் துண்டு பிரச்சாரம் வழங்குவது போன்ற பணிகளை பகிர்ந்ததோடு நிகழ்சிநிரலும் தயாரானது. இதுவரை எந்த ஒரு போராட்டத்தையும் முன்னின்று நடத்திறாத இளம்கன்றுகளான நாங்கள் களம் காண தயாராகினோம்.அவரவரர் அவர்களது பணிகளில் மும்முரமாக இயங்கினோம். போராட்ட நாளும் வந்தது.

ஞாயிறு காலை திட்டமிட்டபடி மகாத்மா காந்தி சாலையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மிக நேர்த்தியாக இருநூறுபேர் உட்காரும்படி பந்தல் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒன்பது மணியளவில் ஒன்றுகூடிய நாங்கள் பேனர்களை கட்டும் பணிகளில் மும்முரமானோம். வாழை அமைப்பை சேர்ந்த நண்பர்கள் சென்னை தகவல் தொழில்நுட்ப அமைப்பை சேர்ந்த நண்பர்கள் மற்றும் நமது 'உலகத்தமிழ்மக்கள்' அரங்கின் தலைமை நிர்வாகி 'சசி', நண்பன் 'கோபி', ரமணன். நிதி போன்ற நண்பர்கள் உடனிருந்த வேளையில் நமது அறப்போராட்டம் துவங்கியது. பந்தல் முழுக்க உடல்சிதறிய எம்தமிழ் உறவுகளின் புகை படங்கள் அடங்கிய பெரிய புகைப்படபலகைகள் இருந்தன. புகைப்பட பலகைகளை வடிவமைப்பதில் தோழர் மோகன், வெங்கடேஷ், கருப்பு, மணிமாறன் எடுத்து கொண்ட பங்களிப்பை நாம் பந்தலில் பார்க்க முடிந்தது. இளகிய மனம் படைத்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைக்கும்விதமாக வடிவமைத்து இருந்தார்கள். நிகழ்வு துவங்குவதற்கு முன்னர் அந்த சாலையின் வழியே சென்ற ஊனமுற்ற பெரியவர் இதனை பார்த்துவிட்டு தானும் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று கூறியதோடு நமது பந்தலில் முதல் நபராக அமர்ந்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். அந்த முதியவரின் இன உணர்வு இளையோர் சமூகத்திடம் இல்லையே என்ற வருத்தத்தோடு நிகழ்வின் முதல் நிகழ்ச்சியான மாவீரன் முத்துகுமாருக்கு மலர்மாலை அந்த பெரியவரின் கைகளால் இடப்பட்டது. அதனை தொடர்ந்து தோழர் வெங்கடேஷ் வரவேற்புரை கொடுத்தார். வரவேற்பு உரையோடு இலங்கை அரசின் மனித உரிமைகளை மீறும் செயலை சுட்டிகாட்டி நடப்பது போர் அல்ல இனப்படுகொலை என்று ஆணித்தரமாக தனது கருத்துக்களை முன்வைத்து வரவேற்புரையை நிறைவுசெய்தார்.

நிகழ்வின் விளக்க உரையை துவங்கிய அறிவழகன் இனப்படுகொலையை தடுத்து நிறுத்து என்ற வேண்டுகோளோடு. சென்னையில் இருந்து கொண்டு நக்கீரன் ஆசிரியருக்கு மிரட்டல்விடுக்கும் இலக்கைதூதுவனுக்கு எச்சரிக்கைமணி அடித்ததோடு ஈழவரலாறு தெரியாமல் தமிழன் எதற்கு இலங்கை போனான் என்று பிதற்றிய ஜெயலலிதாவின் வரலாற்று அறிவு பத்தி ஆதங்கப்பட்டார். ஜெயலிதா வரலாறு நமக்கு தெரியாதா அண்ணா? என்று எண்ணத்தோன்றியது. தமிழினவிரோதிகளை தமிழகத்தைவிட்டு விரட்டுவோம் என்ற முழக்கத்தோடு தனது முன்னரை முடித்து கொண்டார்.கருப்பு என்ற வேல்முருகன் அவர்கள் தொடர்முழக்கங்களை துவங்கி வைத்தார். 'காந்தி தேசம் கொடுக்குதே புத்ததேசம் கொல்லுதே', தமிழ் ஈழத்தை அங்கீகரி, ராணுவ உதவிகளை திரும்பிவாங்கு,மழலைகளை கொள்ளாதே! போன்ற முழக்கங்களும் பதாகைகளில் உள்ள இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் தோழர்களின் துண்டு பிரசுரங்கள் எங்களை கடந்து சென்ற மக்களின் மனசாட்சிகளை தட்டியிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஊடகவியலாளர்கள் அறிவழகன் அண்ணனையும் தோழர் வேல்முருகனையும் கேள்விகளால் துளைத்து எடுத்த பொழுதும் நம் தோழர்கள் தெளிவாக விளக்கினர் அங்கே நடைபெறும் போரை முன்னின்று நடத்துவது இந்தியா என்று. போரை நிறுத்துவது இந்தியாவின் கைகளிலேயே இருக்கிறது மிகத்தெளிவாக விளக்கினர்.

மகாத்மா காந்தி சாலையில் நாங்கள் பந்தலிட்டிருந்த இடம் மையமான இடம் போக்குவரத்தில் அதிகமான மக்கள் கடந்து செல்லும் இடம். கடந்து செல்லும் மக்களில் பலர் அங்கு நாங்கள் வைத்திருந்த பதாகைகளை ஆர்வமுடன் கண்டனர் புகைப்படங்கள் பார்த்த உள்ளம் பதறினர் பெண்கள். துண்டு பிரச்சாரங்களை தோழர்கள் மணிமாறன், வெங்கடேஷ் ராஜூ(நம் அரங்க உறுப்பினர்தான்) எழில் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். இடையிடையே கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் முழக்கங்கள் இடப்பட்டன. தமிழ்சங்கம் நடத்தும் பேரணி இருப்பதாலும் கன்னட அமைப்பு ஒன்று எங்கள் போராட்ட இடத்தை கேட்டதாலும் 12:00 மணியளவில் எனது நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நன்றி உரை வழங்கும்பொழுது தமிழின தலைவனா? தமிழின துரோகியா? என்று பேசி உணர்ச்சி கொந்தளிப்போடு உரையை நிறைவு செய்ய வேண்டியதாகியது. ஈழத்தை நேரில் கண்ட தோழரின் உரைநாங்கள் நிகழ்வை முடிக்கும் தருவாயில் அங்கே எங்களோடு நின்றிருந்த தோழர் ஒருவர் வெகு நேரமாக பேசவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து கொண்டிருந்தார். நாங்களும் அவரை பேசும்படி அனுமதி கொடுத்தோம். ஈழத்திற்கு அடிக்கடி தொழில் விடயமாக சென்றுவரும் தோழர் ஈழத்தின் தற்போதைய நிலவரம் பற்றி கூறினார். இங்கே படங்களில் இருப்பது போன்று கைகால் சிதறி ரோட்டில் சிதறி கிடக்கும் குழந்தைகளை தினம்தினம் பார்ப்பவன் நான். அங்கே எப்போதும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்ட வண்ணம் இருக்கிறது. தமிழனின் உடைமைகள் சாலையில் போட்டு விற்கப்படுகிறது. பச்சை குழந்தைகூட தமிழன் என்றால் திவிரவாதிதான். உடல்சிதறிய பிஞ்சுக்களை என் கரங்களாலே தூக்கி இருக்கிறேன், சார்க் மாநாட்டுக்கு போன இந்திய படைகள் இன்னும் அந்த மண்ணிலே தங்கி போருக்கு துணை போவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். அங்கே செத்துவிழும் தமிழனின் பிணத்தை எடுத்து புதைக்கவும் ஆளில்லை என்று ஈழத்தின் நிலவரம் அவர் சொன்ன பொழுது சொல்ல முடியாத துயரத்தில் எங்கள் மனது ஆழ்ந்தது. எம்தமிழ் இனத்தின் துயரம் நாமன்றி யார் துடைப்பார் என்ற எண்ணமும் எழுந்தது. இந்திய அரசு நேரடியாக ஈழத்தில் இந்தியப்படைகளை இறக்கி தமிழனுக்கு செய்யும் துரோகம் தோழரின் உரையால் தோலுரிக்கப்பட்டது.

போராட்டம் எங்களுள் விளைத்த நம்பிக்கைகள்!
பெங்களூர் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் என்றாலே இன உணர்வு செத்துப்போய் தாங்கள்தான் மாபெரும் அறிவாளி கூட்டம் தங்களை அமெரிக்கர்கள் போலே காட்டிக்கொள்ள மெனக்கெடும் கூட்டம் என்று நினைத்து கொண்டிருந்த பொதுமக்களுக்கு இல்லை இல்லை இந்த கூட்டத்தில் இனத்திற்காக குரல்கொடுக்கும் இளைஞர்களும் உண்டு என்று அடையாளம் காணச்செய்திருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உணர்வாளர்கள் ஒவ்வொருவருமே தங்களால் குறைந்தது நான்கு நண்பர்களை அடுத்தகட்ட போராட்டத்திற்கு அழைத்துவர முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. இதுவரை பெங்களூரில் ஐடி இளைஞர்களுக்கு தமிழ் உணர்வை பறைசாற்றும் அமைப்புக்கள் இல்லை இனிமேல் நமது உலகத்தமிழ் மக்கள் அரங்கு அப்படி இருக்கும். தூங்கி கொண்டிருக்கும் தமிழனின் இன உணர்வுகளை தட்டி எழுப்பும். தொடர்ந்து தமிழனுக்காக குரல் கொடுக்கும். இந்த போராட்டம் வெறும் ஒத்திகையே பெங்களூரில் அடுத்தடுத்து தமிழனின் குரல் ஓங்கி ஒலிக்கும் அது ஈழத்தில் இன்னலுறும் தமிழனுக்கு ஆதரவை கொடுக்கும் இந்திய தேசியத்தின் பகையை உலகிற்கு விளக்கும். இளம் கன்றுகளை முறைப்படுத்தி வழிநடத்திய அண்ணன் அறிவழகனுக்கு இது பெங்களூரில் முதல்வெற்றியை பெற்றுதந்திருக்கிறது ஈழத்தில் அமைதி திரும்பும்வரை எங்களுக்கு ஓய்வு இல்லை தொடர்ந்து போராடுவோம். ஓர்குட் வாய்பேச்சு வீரர்களின் தளம் என்பதை பொய்யாக்குவோம்

தமிழன்பனின் நன்றியுரை!
உணர்வாளர்களை அடையாளம் காணவைத்த உலகத்தமிழ் மக்கள் அரங்கத்திற்கு முதல் நன்றி. எங்கள் அழைப்புகேட்டு உடல்நிலை சரியில்லாத பொழுதும் ஓடோடி வந்த 'செயல்வீரர்' அண்ணன் சசி, நண்பன் கோபி, ரமணன், நிதி போன்ற சென்னை தோழர்களுக்கும் நன்றி. அரங்கில் செய்தியை பார்த்துவிட்டு தன்னோடு பத்து நண்பர்களை அழைத்து வந்த ராஜூவிற்கு நன்றி.தன் வலைப்பூவில் நமது போராட்ட செய்திகளை வெளியிட்டதோடு அதிகாலையிலேயே நம்முடன் வந்து கலந்து கொண்ட அரவிந்த் அவர்களுக்கு நன்றி. வாழை அமைப்பின் தோழர்களுக்கும் சென்னை தகவல்தொழில்நுட்ப தோழர்களுக்கும் நன்றி. கலந்து கொள்ளமுடியாவிட்டாலும் உணர்வால் ஆதரவு தந்த தோழர்கள்:நிகழ்வில் கலந்து கொள்ளமுடியாவிட்டாலும் நமது போராட்டத்தை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி. அஸ்திரேலியாவில் இருந்துகொண்டு போராட்ட தகவலை தனது தம்பிக்கு சொல்லி அனுப்பி வைத்த தோழர் ஜெயக்குமாருக்கும், போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்ததோடு தனது வலைப்பூவில் நமது செய்தியை வெளியிட்ட இந்தோனிசியாவில் வாழும் தோழர் மதிபாலாவிற்க்கும், எங்களை அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த நார்வே தமிழர் விஜயசங்கருக்கும் சென்னையில் இருந்து கொண்டு போராட்டத்திற்கு ஆலோசனைகளை வழங்கிய சகோதரி குட்டிக்கும் குறுந்தகவல் மூலம் வாழ்த்து அனுப்பிய தம்பி பார்த்திபனுக்கும் தமிழன்பனின் நன்றிகள் உரித்தாகுக. ஒன்றாக பணியாற்றி மேலும் பல போராட்டத்தை நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை விதைத்த சக தோழர்களுக்கு நன்றி நன்றி நன்றி!

தகவல் -தமிழன்பன்

உலக தமிழ் மக்கள் அரங்கம் காண ..
http://www.orkut.co.in/Main#Communities.aspx

No comments: