21 Feb 2009

இப்படியும் ரசிக்கலாம்

இருவேறு சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த கட்டுரை.

இரண்டு சம்பவங்கள் என்ன என்று சொல்லி விடுகிறேன்.முதல் சம்பவம் சென்னை சட்டகல்லூரி மாணவர் மோதல்.இரண்டாவது சம்பவம் சென்னை உயர் நீதி மன்றத்தில் நடந்த தாக்குதல்.

பத்து திருமணமாகாத ஆண்களை(கல்லூரி தோழர்களை) கொண்ட இரு தனி வீட்டில் நான் தங்கி உள்ளேன்.தனிப்பட்ட முறையில் அத்துணை பேரையும் எனக்கு நன்றாகவே தெரியும்.மிகவும் நல்ல குண நலன்களை கொண்டவர்கள் தான் அனைவரும்.

ஆனால் மேற்கண்ட இரண்டு சம்பவங்களை இவர்கள் தொலைகாட்சியில் பார்த்த பார்வை என்னை பெரிதும் அதிர்ச்சி கொள்ள வைத்தது.
இவர்கள் இந்த இரண்டு தாக்குதலையும் மிகுந்த புன்னைகைக்கு இடையில் ரசித்தே பார்த்தனர்.ஒவ்வொரு முறை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது ...அவர்கள் மனதில் அது ஆழமாக பதிவதை உணர முடிந்தது.

இரண்டாம் முறை பார்க்கும் போது..

"இப்ப பாரு கால்லே போடுவான்"

"பேசிட்டு இருக்கான்ல ...இவனக்கு இப்ப மண்டைய பொளந்து ஓட உடுவானுங்க பாரு"

"இவன் என்ன தக்காளி சட்டினிய மூஞ்சில அப்பி இருக்கான்"

"காலை உடச்சு தொங்க விட்டு அடிகிரானுங்க"

இன்னும் பல ..

மூன்றாம் முறை ,நான்காம் முறை என செல்ல செல்ல ..இவர்கள் இன்னும் ஆழமாக அதில் ஊடுருவி விட்டார்கள்

இப்படி பெரும்பாலும் ரசிக்கும் வசனமாகவே இருந்து விட்டன.என்னால் உகிக்கவே முடியவில்லை ..ஏன் இப்படி ?எதனால்?

பெரும்பாலும் இவர்கள் சம்பவத்தின் பின்னணி ஏதும் தெரியாமலே இப்படி ரசிக்கிறார்கள்.இவர்களுக்கு ஊடகத்தில் தெரிய படுத்தும் போது ...அங்கே அடிவாங்குபவன் நல்லவனாகவும்,அடிப்பவன் கெட்டவனாகவும் தெரிகிறான்.மறைக்கப்படும் அநீதி குறித்து இவர்கள் அறியவிரும்பவில்லை ..நாம் எடுத்து கூறும் போதும்...

இவர்கள் மட்டும் அல்ல ..இந்த ஒவ்வொரு நொடிக்கும்,பேருந்திலும்,போது இடங்களிலும்,அலுவலகங்களிலும் இதை ரசித்து ரசித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

இப்படி குரூரமாக ரசிக்கும் மனநிலை எங்கு இருந்து வந்தது?

யாருக்கேனும் பதில் தெரியுமா?

20 Feb 2009

கரைகிறேன் நினைவுகளாய்

போதை தரும் உன்,
நினைவு அலைகள் - என்,
காலடி தொட.......,
கனவுகளில் கரைகிறேன்,
உன் நினைவுகளாய்.

போதை நட்பு

மதுக்கோப்பையின் போதையை போலவே,
உன் வார்த்தையின் கனிவு,
அப்பட்டமாய் உளறுகிறேன்,
அடுக்கடுக்காய் உண்மைகளை,
உள்ளத்தில் ஏதோ முத்திரை இட்டாய்,
உன்னத நட்பின் அடையாளமோ?

19 Feb 2009

பெங்களூர் போராட்டம் முதல் முயற்சி!

பெங்களூரில் கடந்த ஞாயிறு(15/02/2008) ல் அண்ணன் அறிவழகன் தலைமையில் ஒரு போராட்டத்தை நடத்தி காட்டி இருக்கிறோம். கொஞ்சம் நிதானமாக திரும்பி பார்க்கும் பொழுது போராட்டத்தின் அடித்தளம் என்ன என்று சிந்திக்க தோன்றுகிறது. ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகளை தமிழனாக நமது எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் உங்களை போலத்தான் எங்களுக்கும் இருந்தது. எங்களிடம் உணர்வு இருந்ததே தவிர அது நடைமுறை சாத்தியமா என்ற ஐயமே எப்போதும் எங்களிடம் மிச்சம் இருந்தது. பெங்களூரில் தமிழ் உணர்வாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணமுடைய அண்ணன் அறிவழகன் அவர்கள் ஒரு சந்திப்பின் போது ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து இனப்படுகொலைக்கு எதிரான நமது உணர்வுகளை உலகிற்கு காட்ட வேண்டும் என்று அவரது எண்ணத்தை கூறினார். பெங்களூரில் தமிழ் உணர்வாளர்களை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதான பணி அல்ல. மேலும் தமிழினம் சார்ந்த போராட்டத்திற்கு அனுமதி பெறுவது அவ்வளவு எளிதானது இல்லை. படம் பார்க்க கிரிக்கெட்டு பார்க்க கூட்டம் கூடும் தமிழன் இன உணர்வு சார்ந்த போராட்டம் என்றால் 'நமக்கு எதுக்குடா வேண்டாத வேலை' என்பான். அப்படியே 'நம் இனத்துக்கு நாமில்லாமல் வேறு யார் போராடுவா?' என்று கேள்வி எழுப்பினால் நமக்கு 'தமிழ் திவிரவாதி' பட்டம் கண்டிப்பாக கிடைக்கும். அதனாலே நாங்கள் கையறு நிலையில் சில நாட்களை கழித்தோம். முத்துகுமரனின் தியாகம் முகத்தில் அறைந்தது போன்ற ஒரு பாதிப்பை எங்களிடம் ஏற்படுத்தியது. ஒரு உணர்வாளன் தன் உயிரையே கொடுத்து இருக்கிறான் நம்மால் ஒருநாள் போராட்டத்தை நடத்த முடியாதா
என்ற கேள்வியை எங்களுள் விதைத்து சென்றான் மாவீரன் முத்துகுமார்


உண்ணாநிலை போராட்டம் அவ்வளவு எளிதாக அனுமதி கிடைக்காது என்று சொன்ன அறிவழகன் அண்ணன் அறவழி போராட்டத்திற்கு அனுமதி பெறுவது சாத்தியம் என்ற உண்மையை சொன்னார். நாங்கள் சந்தித்த பொழுது நான் வெங்கடேசன் மாற்றும் அண்ணன் ஆகிய மூன்று பேர் மட்டுமே இருந்தோம். அறப்போராட்டத்தில் கண்டிப்பாக உணர்வாளர்களை ஒருங்கிணைத்து மாபெரும் வெற்றியாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. வெறும் மூன்றில் துவங்கிய எங்கள் பயணம் அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி நகர துவங்கியது. அறிவழகன் அண்ணன் போராட்டம் குறித்த இழையை போட்ட பின்னர் சிறிது சிறிதாக ஆதரவு பெருகியது. உடனுக்குடன் எங்களுக்கு அழைப்பு விட்டு போராட்டத்தை எப்படி நடத்துவது என்று பலவாறு முடிக்கிவிடும் பணியை அண்ணன் பார்த்துக்கொண்டார். நிகழ்சி எப்படி நடத்துவது என்ற கூட்டம் அடிக்கடி நடந்து கொண்டே இருந்தது. சந்திப்பின் போது வரும் தோழர்களின் எண்ணிக்கை கூடிகொண்டே இருந்தது.வேல்முருகன் மோகன் மணிமாறன் தமிழ்வேந்தன் எழில் என்று உணர்வாளர்களின் கூட்டம் போராட்டத்தை புது உத்வேகத்துடன் நகர்த்தியது. அலைபேசிகளின் வாயிலாக போராட்டத்திற்கான ஆதரவுகளை நண்பர்கள் தெரிவித்தார்கள். பதாகைகள் தட்டிகள் துண்டு பிரச்சாரம் வழங்குவது போன்ற பணிகளை பகிர்ந்ததோடு நிகழ்சிநிரலும் தயாரானது. இதுவரை எந்த ஒரு போராட்டத்தையும் முன்னின்று நடத்திறாத இளம்கன்றுகளான நாங்கள் களம் காண தயாராகினோம்.அவரவரர் அவர்களது பணிகளில் மும்முரமாக இயங்கினோம். போராட்ட நாளும் வந்தது.

ஞாயிறு காலை திட்டமிட்டபடி மகாத்மா காந்தி சாலையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மிக நேர்த்தியாக இருநூறுபேர் உட்காரும்படி பந்தல் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒன்பது மணியளவில் ஒன்றுகூடிய நாங்கள் பேனர்களை கட்டும் பணிகளில் மும்முரமானோம். வாழை அமைப்பை சேர்ந்த நண்பர்கள் சென்னை தகவல் தொழில்நுட்ப அமைப்பை சேர்ந்த நண்பர்கள் மற்றும் நமது 'உலகத்தமிழ்மக்கள்' அரங்கின் தலைமை நிர்வாகி 'சசி', நண்பன் 'கோபி', ரமணன். நிதி போன்ற நண்பர்கள் உடனிருந்த வேளையில் நமது அறப்போராட்டம் துவங்கியது. பந்தல் முழுக்க உடல்சிதறிய எம்தமிழ் உறவுகளின் புகை படங்கள் அடங்கிய பெரிய புகைப்படபலகைகள் இருந்தன. புகைப்பட பலகைகளை வடிவமைப்பதில் தோழர் மோகன், வெங்கடேஷ், கருப்பு, மணிமாறன் எடுத்து கொண்ட பங்களிப்பை நாம் பந்தலில் பார்க்க முடிந்தது. இளகிய மனம் படைத்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைக்கும்விதமாக வடிவமைத்து இருந்தார்கள். நிகழ்வு துவங்குவதற்கு முன்னர் அந்த சாலையின் வழியே சென்ற ஊனமுற்ற பெரியவர் இதனை பார்த்துவிட்டு தானும் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று கூறியதோடு நமது பந்தலில் முதல் நபராக அமர்ந்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். அந்த முதியவரின் இன உணர்வு இளையோர் சமூகத்திடம் இல்லையே என்ற வருத்தத்தோடு நிகழ்வின் முதல் நிகழ்ச்சியான மாவீரன் முத்துகுமாருக்கு மலர்மாலை அந்த பெரியவரின் கைகளால் இடப்பட்டது. அதனை தொடர்ந்து தோழர் வெங்கடேஷ் வரவேற்புரை கொடுத்தார். வரவேற்பு உரையோடு இலங்கை அரசின் மனித உரிமைகளை மீறும் செயலை சுட்டிகாட்டி நடப்பது போர் அல்ல இனப்படுகொலை என்று ஆணித்தரமாக தனது கருத்துக்களை முன்வைத்து வரவேற்புரையை நிறைவுசெய்தார்.

நிகழ்வின் விளக்க உரையை துவங்கிய அறிவழகன் இனப்படுகொலையை தடுத்து நிறுத்து என்ற வேண்டுகோளோடு. சென்னையில் இருந்து கொண்டு நக்கீரன் ஆசிரியருக்கு மிரட்டல்விடுக்கும் இலக்கைதூதுவனுக்கு எச்சரிக்கைமணி அடித்ததோடு ஈழவரலாறு தெரியாமல் தமிழன் எதற்கு இலங்கை போனான் என்று பிதற்றிய ஜெயலலிதாவின் வரலாற்று அறிவு பத்தி ஆதங்கப்பட்டார். ஜெயலிதா வரலாறு நமக்கு தெரியாதா அண்ணா? என்று எண்ணத்தோன்றியது. தமிழினவிரோதிகளை தமிழகத்தைவிட்டு விரட்டுவோம் என்ற முழக்கத்தோடு தனது முன்னரை முடித்து கொண்டார்.கருப்பு என்ற வேல்முருகன் அவர்கள் தொடர்முழக்கங்களை துவங்கி வைத்தார். 'காந்தி தேசம் கொடுக்குதே புத்ததேசம் கொல்லுதே', தமிழ் ஈழத்தை அங்கீகரி, ராணுவ உதவிகளை திரும்பிவாங்கு,மழலைகளை கொள்ளாதே! போன்ற முழக்கங்களும் பதாகைகளில் உள்ள இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் தோழர்களின் துண்டு பிரசுரங்கள் எங்களை கடந்து சென்ற மக்களின் மனசாட்சிகளை தட்டியிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஊடகவியலாளர்கள் அறிவழகன் அண்ணனையும் தோழர் வேல்முருகனையும் கேள்விகளால் துளைத்து எடுத்த பொழுதும் நம் தோழர்கள் தெளிவாக விளக்கினர் அங்கே நடைபெறும் போரை முன்னின்று நடத்துவது இந்தியா என்று. போரை நிறுத்துவது இந்தியாவின் கைகளிலேயே இருக்கிறது மிகத்தெளிவாக விளக்கினர்.

மகாத்மா காந்தி சாலையில் நாங்கள் பந்தலிட்டிருந்த இடம் மையமான இடம் போக்குவரத்தில் அதிகமான மக்கள் கடந்து செல்லும் இடம். கடந்து செல்லும் மக்களில் பலர் அங்கு நாங்கள் வைத்திருந்த பதாகைகளை ஆர்வமுடன் கண்டனர் புகைப்படங்கள் பார்த்த உள்ளம் பதறினர் பெண்கள். துண்டு பிரச்சாரங்களை தோழர்கள் மணிமாறன், வெங்கடேஷ் ராஜூ(நம் அரங்க உறுப்பினர்தான்) எழில் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். இடையிடையே கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் முழக்கங்கள் இடப்பட்டன. தமிழ்சங்கம் நடத்தும் பேரணி இருப்பதாலும் கன்னட அமைப்பு ஒன்று எங்கள் போராட்ட இடத்தை கேட்டதாலும் 12:00 மணியளவில் எனது நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நன்றி உரை வழங்கும்பொழுது தமிழின தலைவனா? தமிழின துரோகியா? என்று பேசி உணர்ச்சி கொந்தளிப்போடு உரையை நிறைவு செய்ய வேண்டியதாகியது. ஈழத்தை நேரில் கண்ட தோழரின் உரைநாங்கள் நிகழ்வை முடிக்கும் தருவாயில் அங்கே எங்களோடு நின்றிருந்த தோழர் ஒருவர் வெகு நேரமாக பேசவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து கொண்டிருந்தார். நாங்களும் அவரை பேசும்படி அனுமதி கொடுத்தோம். ஈழத்திற்கு அடிக்கடி தொழில் விடயமாக சென்றுவரும் தோழர் ஈழத்தின் தற்போதைய நிலவரம் பற்றி கூறினார். இங்கே படங்களில் இருப்பது போன்று கைகால் சிதறி ரோட்டில் சிதறி கிடக்கும் குழந்தைகளை தினம்தினம் பார்ப்பவன் நான். அங்கே எப்போதும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்ட வண்ணம் இருக்கிறது. தமிழனின் உடைமைகள் சாலையில் போட்டு விற்கப்படுகிறது. பச்சை குழந்தைகூட தமிழன் என்றால் திவிரவாதிதான். உடல்சிதறிய பிஞ்சுக்களை என் கரங்களாலே தூக்கி இருக்கிறேன், சார்க் மாநாட்டுக்கு போன இந்திய படைகள் இன்னும் அந்த மண்ணிலே தங்கி போருக்கு துணை போவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். அங்கே செத்துவிழும் தமிழனின் பிணத்தை எடுத்து புதைக்கவும் ஆளில்லை என்று ஈழத்தின் நிலவரம் அவர் சொன்ன பொழுது சொல்ல முடியாத துயரத்தில் எங்கள் மனது ஆழ்ந்தது. எம்தமிழ் இனத்தின் துயரம் நாமன்றி யார் துடைப்பார் என்ற எண்ணமும் எழுந்தது. இந்திய அரசு நேரடியாக ஈழத்தில் இந்தியப்படைகளை இறக்கி தமிழனுக்கு செய்யும் துரோகம் தோழரின் உரையால் தோலுரிக்கப்பட்டது.

போராட்டம் எங்களுள் விளைத்த நம்பிக்கைகள்!
பெங்களூர் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் என்றாலே இன உணர்வு செத்துப்போய் தாங்கள்தான் மாபெரும் அறிவாளி கூட்டம் தங்களை அமெரிக்கர்கள் போலே காட்டிக்கொள்ள மெனக்கெடும் கூட்டம் என்று நினைத்து கொண்டிருந்த பொதுமக்களுக்கு இல்லை இல்லை இந்த கூட்டத்தில் இனத்திற்காக குரல்கொடுக்கும் இளைஞர்களும் உண்டு என்று அடையாளம் காணச்செய்திருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உணர்வாளர்கள் ஒவ்வொருவருமே தங்களால் குறைந்தது நான்கு நண்பர்களை அடுத்தகட்ட போராட்டத்திற்கு அழைத்துவர முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. இதுவரை பெங்களூரில் ஐடி இளைஞர்களுக்கு தமிழ் உணர்வை பறைசாற்றும் அமைப்புக்கள் இல்லை இனிமேல் நமது உலகத்தமிழ் மக்கள் அரங்கு அப்படி இருக்கும். தூங்கி கொண்டிருக்கும் தமிழனின் இன உணர்வுகளை தட்டி எழுப்பும். தொடர்ந்து தமிழனுக்காக குரல் கொடுக்கும். இந்த போராட்டம் வெறும் ஒத்திகையே பெங்களூரில் அடுத்தடுத்து தமிழனின் குரல் ஓங்கி ஒலிக்கும் அது ஈழத்தில் இன்னலுறும் தமிழனுக்கு ஆதரவை கொடுக்கும் இந்திய தேசியத்தின் பகையை உலகிற்கு விளக்கும். இளம் கன்றுகளை முறைப்படுத்தி வழிநடத்திய அண்ணன் அறிவழகனுக்கு இது பெங்களூரில் முதல்வெற்றியை பெற்றுதந்திருக்கிறது ஈழத்தில் அமைதி திரும்பும்வரை எங்களுக்கு ஓய்வு இல்லை தொடர்ந்து போராடுவோம். ஓர்குட் வாய்பேச்சு வீரர்களின் தளம் என்பதை பொய்யாக்குவோம்

தமிழன்பனின் நன்றியுரை!
உணர்வாளர்களை அடையாளம் காணவைத்த உலகத்தமிழ் மக்கள் அரங்கத்திற்கு முதல் நன்றி. எங்கள் அழைப்புகேட்டு உடல்நிலை சரியில்லாத பொழுதும் ஓடோடி வந்த 'செயல்வீரர்' அண்ணன் சசி, நண்பன் கோபி, ரமணன், நிதி போன்ற சென்னை தோழர்களுக்கும் நன்றி. அரங்கில் செய்தியை பார்த்துவிட்டு தன்னோடு பத்து நண்பர்களை அழைத்து வந்த ராஜூவிற்கு நன்றி.தன் வலைப்பூவில் நமது போராட்ட செய்திகளை வெளியிட்டதோடு அதிகாலையிலேயே நம்முடன் வந்து கலந்து கொண்ட அரவிந்த் அவர்களுக்கு நன்றி. வாழை அமைப்பின் தோழர்களுக்கும் சென்னை தகவல்தொழில்நுட்ப தோழர்களுக்கும் நன்றி. கலந்து கொள்ளமுடியாவிட்டாலும் உணர்வால் ஆதரவு தந்த தோழர்கள்:நிகழ்வில் கலந்து கொள்ளமுடியாவிட்டாலும் நமது போராட்டத்தை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி. அஸ்திரேலியாவில் இருந்துகொண்டு போராட்ட தகவலை தனது தம்பிக்கு சொல்லி அனுப்பி வைத்த தோழர் ஜெயக்குமாருக்கும், போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்ததோடு தனது வலைப்பூவில் நமது செய்தியை வெளியிட்ட இந்தோனிசியாவில் வாழும் தோழர் மதிபாலாவிற்க்கும், எங்களை அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த நார்வே தமிழர் விஜயசங்கருக்கும் சென்னையில் இருந்து கொண்டு போராட்டத்திற்கு ஆலோசனைகளை வழங்கிய சகோதரி குட்டிக்கும் குறுந்தகவல் மூலம் வாழ்த்து அனுப்பிய தம்பி பார்த்திபனுக்கும் தமிழன்பனின் நன்றிகள் உரித்தாகுக. ஒன்றாக பணியாற்றி மேலும் பல போராட்டத்தை நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை விதைத்த சக தோழர்களுக்கு நன்றி நன்றி நன்றி!

தகவல் -தமிழன்பன்

உலக தமிழ் மக்கள் அரங்கம் காண ..
http://www.orkut.co.in/Main#Communities.aspx

17 Feb 2009

கலாச்சாரம் ஏன் வேண்டும்?


எனது சென்ற பதிவாய் கலாச்சாரம் யாருக்கு மட்டும் என்பதை பதிந்து...அதன் மூலம் கலாச்சாரம் ஆணுக்கும்,பெண்ணுக்கும் பொதுவானது என்பதை மேற்கோள் காட்டும் விதமாய் முயற்சி செய்து இருந்தேன்.

இந்த பதிவில் எனது எண்ணப்படி ஏன் கலாச்சாரம் வேண்டும் என்பதை பற்றி ஆராய்ச்சிக்கு விழைகிறேன்.

ஒழுக்க நெறிமுறையே கலாச்சாரத்திற்கு ஆணிவேராக இருக்க இயலும்.கலாச்சாரம் என்பது ஒரு சமூகம் தனக்கான,தன் மக்களுக்கான .ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒழுக்க கோட்பாட்டை கொண்டு இருப்பதே ஆகும்.

சரி எத்தகைய ஒழுக்க கோட்பாடு?
மன ஒழுக்கம்,செயல் ஒழுக்கம்,பேச்சு ஒழுக்கம்.

மன ஒழுக்கம்
தனிப்பட்ட மனிதர்கள் சம்பந்த பட்டதாகி விடுகிறது.மனதளவில் ஒருவன் ஒழுக்கமா இருக்கிறானா? இல்லையா? என்பது ஒரு போதும் தெரிய போவது இல்லை.ஆக இத பத்தி அதிகம் பேச வேண்டியது இல்லை.

பேச்சு ஒழுக்கம்
ரொம்ப முக்கியமானது ...ஆனால் ஒரு போதும் இதை நாம் கலாச்சார அங்கமாக பார்ப்பதே இல்லை.நம்ம தான் தினம் தினம் பார்த்து இருப்போமே...ஒரு நாளைக்கு சாலையில் போகும் போது ஒரே ஒரு கெட்ட வார்த்தையாவது கேட்டு விடுவோம்.

கடைசியா இப்ப அது ஒரு கலாச்சார வடிவம் பெற்று விட்டது.மதுரை பக்கம் பார்த்தீர்களானால் ...நட்புரீதியாக பேசிக்கொள்ளும் நண்பர்கள் கூட .."ஒத்தா" என்ற வார்த்தையை அழகாக(!?) பயன்படுத்துவார்கள்.

செயல் ஒழுக்கம்
இதுதான் இன்றைக்கு கலாச்சாரத்தின் வடிவமாய் பார்க்கப்படுகிறது.அதிலும் பெரும்பாலும் பெண்களுக்கு.இன்னைக்கு இது என்ன சொல்லுதுனா...

ஆண்கள் குடிப்பது தப்பு.பெண்கள் குடித்தால் கலாச்சார மீறல்.

ஆண்கள் எப்படியும் உடை அணியலாம்.போது இடத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.பெண்கள் கெண்டை கால் தெரிந்தாலும் கலாச்சார மீறல்.

தேடிச்சென்று பெண்ணை புணர்தல் ஆணின் உரிமை.மனம் கவர்ந்தவனை காதலித்தாலே அது கலாச்சார மீறல்.

இப்ப தெரியுதோ செயல் ஒழுக்கம் யாருக்கு சொல்ல பட்டு இருக்குன்னு.

ஒழுகத்துகான நடுநிலை எண் 5 என கொள்வோமே ஆனால் இங்கு ஆண்களுக்கான ஒழுக்கம் 1 இருந்தால் போதும் எனவும் ..பெண்களுக்கு 9 இருக்க வேண்டும் எனவும் நம்ம கலாச்சார கட்டமைப்பு சொல்கிறது.

சரி எல்லாம் சரித்தான் ...எதுக்கு இந்த கலாச்சாரம்?

1)இந்த ஒழுக்க கலாச்சார கட்டமைப்பு இல்லை என்றால்,நமக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

2)வீட்டுக்கு எப்படி அஸ்திவாரம் போட்டு ,செங்கல்,சிமிண்டுன்னு தரமா பாத்து வீட்ட கட்டுகிறோமோ அதை மாதிரி இந்த ஒழுக்க கட்டமைப்பு.
ஒழுங்கா இல்லை என்றால் எல்லாம் கோவிந்தா.

ஒருவனுக்கு ஒருத்தி,ஒருத்திக்கு ஒருவன் அப்படின்னு சொல்லை என்றால் அடிபிடி சண்டை வந்து ....உயிரிழப்பு தான் ஏற்படும்(இங்க கொஞ்சம் அதிகமா ஒருவனுக்கு பலவும்,கொஞ்சூண்டு ஒருத்திக்கு பலவும் இருக்கு)

சரி போன பதிவுல ராம் சேனாவுக்கு எதிரா பெண்ணுக்கு ஆதரவாய் எழுதினேன்..அப்ப இந்த பொண்ணுங்க பண்ணுனது சரியா?

இரண்டு வாக்கியங்களை நான் இங்கு மேற்க்கோள் காட்ட விரும்புகிறேன்.
Freedom is self resposible(தமிழ்ல தெரியலை)

உன்னுடைய உரிமை என்பது அடுத்தவர் மூக்கு நுனி வரை மட்டுமே.

முதலில் உள்ளது உங்களுக்கு எளிதாய் புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.
இரண்டாவது வாக்கியத்தை கொஞ்சம் நிகழ் கால நடப்புடன் சம்பந்த படுத்த விரும்புகிறேன்.

பெண்ணின் ஆடை,ஆணின் ஆடை என்பது அவர்கள் தனிப்பட்ட விஷயம் ஆகி விடுகிறது.ஆனாலும் பெண்ணின் ஆடை ஆண் தன்னை தூண்டுவதாயோ,ஆணின் ஆடை பெண்ணை தூண்டுவதாயோ அமையும் எனில் அது கேள்விக்கு உள்ளாக்க படவேண்டும்.

என்ன இது ஆணாதிக்க சமூகமாய் உள்ளது.ஆகையால் பெண்கள் மட்டுமே கேள்விக்கு உட்படுகிறார்கள்.

சினிமாவில் பெண்கள் அறைகுறையாய் ஆடினால் தான் தப்பு.அர்ஜுன்,ஆர்யா,சித்தார்த் ஆகியோர் உள்ளாடையுடன் காட்சி தருவது சரியே.(படத்திற்கு தேவை என்று சொல்வீர்களே எனில்,நான் பெண்ணின் ஆடை குறைப்பை ..ஆணாதிக்க சமூகத்தில் பட ஓட்டத்திற்கு தேவை என்று சொல்வேன்)

ஆக கலாச்சாரம் வேண்டும்..எப்படி?ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாய்...

இல்லை எனில் கலாச்சாரம் குறித்து பேசாது இருப்பீர்களாக.

12 Feb 2009

கலாச்சாரம் யாருக்கு மட்டும்?


எந்த ஒரு நேர்த்திப்படுத்துதல் எண்ணமும் இல்லாமல் மனம் திறந்த ஓடையாகவே இந்த பதிவை எழுதுகிறேன்.எதிர்ப்புகளை எதிர் நோக்கியே.எதிர்ப்புகளை கொணரும் அளவுக்கு வீரியம் இருக்குமா என்பதை நான் அறியேன்.

இங்கு மனித மூளைகளை மட்டப்படுத்தி இருக்கும் பார்ப்பனிய கட்டமைப்பின் நீளமும்,அது வரையறுக்கும் கலாச்சாரத்தின் தன்மையும்,ஆணாதிக்க கையின் நீளமும் சொல்லி புரிய வைப்பது எளிதல்ல.

கலாசாரம் யாருக்கு மட்டும் என்பதன் பொருட்டு எத்தனை கேள்விகளை எழுப்பினாலும்.

"அதெப்படி" என ஒற்றை வார்த்தையில் அனாசியமாக தட்டி கழித்து விட்டு போகும் படிக்கு வளர்த்திருக்கிறது மக்களை.

பெண்ணியம் பேசும் போது பெரும்பாலும் தோற்றுப்போகும் இடம் அவர்களின் ஆடை நேர்த்தியாகவே இருக்கிறது.அவர்களின் ஆடைகளை அவர்களே தெரிவு செய்து கொள்ளும் உரிமைகள் அவர்களுக்கு உண்டென பேசிப்பார்ப்போமே ஆனால் ...இந்த பார்ப்பனிய கட்டமைப்பில் மூளை மங்கி போனவர்கள் "கற்பழிப்பை நியாயப்படுத்தும்" உரிமை போராட்டத்திற்கு இட்டுச்சென்று இடுவர்.

எனவே இதை ஒப்பிடுதல் முறையிலேயே பேசுவதுதான் உசித்தமாகும்.

"ஆணென்ன பெண்ணென்ன,நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்" இந்த தத்துவ சித்தாந்தங்களை எல்லாம் ராம் சேனா அமைபிற்கு கொடிபிடிப்பவர்களுக்கு ரசிக்க மட்டுமே தெரியும்.

ஒப்பிடுதல் கேள்விகளுக்கு வரும்முன்னர் ஒரு சிறு தகவலை பகிர்ந்து கொள்கிறேன்பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் வருகைக்கு முன்னர் இருந்தே இங்கு 30 விழுக்காடு பெண்களுக்கு குடிப்பழக்கம் என்பது உண்டு.எனது தாத்தா பாட்டி காலத்தில் மார்பு கச்சை அணியும் பழக்கம் கிடையாது.

மங்களூரு சம்பவத்தில் ராம் சேனா அமைப்பின் செயலானது கலாச்சார காவல் செயல் என்பதை காட்டிலும்,ஆணாதிக்க நிலை நாட்டல் எனக்கொள்வதே பொருத்தமாக இருக்கும்.

பாதிக்க பட்ட பெண்களின் உடைகளை பற்றி பேசுபவர்களே,பாதிப்பை உள்ளாக்கியவர்கள் அணிந்து இருந்தது பாரம்பரிய உடையா?பெண்கள் பப்பிற்கு செல்லக்கூடாது என சொல்பவர்கள்.ஆண்கள் செல்வதை ஏன் பழிக்கவில்லை?

ஒழுக்கம் தான் கலாச்சாரத்தின் தூண் என்றால்..ஆண் என்றால் குடிப்பழக்கம் கொள்ளலாம் என்பது எத்தகைய நியாயம்??

ஒழுக்கம் மனதோடு சம்பந்த பட்டது என்றால்?பெண்களை பலவந்த படுத்தி புணரும் ஆண்வர்கதினரின் ஒழுக்கம் எத்தகைய கேள்விக்கு உரியது?

பேருந்து நிலையங்களில் பலர் பார்க்கும் பொருட்டு ..ஆண் குறியை வெளியே எடுத்து சிறுநீர் கழிப்பவர்களை தாங்கள் பார்த்தது இல்லையா?அவர்களின் மேலே ஏன் கலாச்சார காவல் பாயவில்லை?

குடித்து விட்டு நிர்வாணமாயும்,அலங்கோலமாயும் கிடக்கும் கலாச்சார ஆண்களுக்கு எதிரான கலாச்சார காவலின் நடவடிக்கை என்ன?

ராம் சேனா அமைப்பினால் கலாசார அமைப்பை வரையறுக்க இயலுமா?

மங்களூரு சம்பவத்தினை நியாயபடுத்த முனைபவர்களும்,அவர்கள் கூறும் கலாச்சார கோட்பாட்டை மட்டும் ஏற்றுகொள்பவர்களும் ஆண்களின் கலாசார கோட்பாடு என எதை கூறுவீர்கள்?

சரி இத்தகைய பப்புகளில் ஆண்களுக்கூடான சண்டையே அதிக அளவு இருக்கும் பொழுது,பெண்கள் மீதான இந்த வன்மையை மட்டும் இவ்வாறு படம் பிடித்ததன் நோக்கம் என்ன?

கேமரா கண்களும் "பெண்ணென்றால் போக பொருள் எனவும்,வியாபர பொருள் எனவும் எண்ணம் கொண்டுள்ளதோ?"

Men are from Mars,Women are from Venus என்று நேற்று ஒரு நண்பர் சொல்லி இருந்தார்.ஆக ஆண் அவன் பாரம்பரிய உடையை மாற்றி ஜீன்ஸ் உம் டி-ஷர்ட் உம் அணிய உரிமை உள்ள பொழுது பெண்ணுக்கு இல்லையா?

வேலைக்கும் செல்லும் ஆண் குடிக்கலாம் எனும் போது...வேலைக்கு செல்லும் பெண் குடிக்க கூடாதா?

ஒரு சீரழிவு கட்டமைப்பை(பார்ப்பனிய) வேரருப்பதை விட்டு விட்டு ,இத்தகைய செயல்களை புரிவது கேவலமான விலங்கினை புணர்வதற்கு ஒப்பாகும்.

9 Feb 2009

எனக்கென்ன?யார் எப்படி போனால் எனக்கென்ன?

"நாட்டுக்கொரு சேதி சொல்ல நாகரிக கோமாளி வந்தேனுங்க".......இந்த பாடல் இடையில் வரும் ஒரு வசனம் ....

முதலாளி
: "தேயிலை இறக்குமதி பண்ணபோகிறோம்"

மற்றவர்:அப்ப உள்ளூர் விவசாயிங்க கதி?

முதலாளி
:எவன் எக்கேடு கெட்டா நமக்கென்?நமக்கு லாபம் முக்கியம்.

இது முதலாளிங்க மனநிலை அல்ல..இன்னைக்கு நம்மில் பலரின் மனநிலை இதுதான்.அன்னைக்கு முதலாளி மட்டும் தான் கேட்டான் இன்னைக்கு எல்லோரும் கேக்குறீங்க...

நான் சாதியை அறவே வெறுப்பவன்.ஆனாலும் இங்கு அது தேவைபடுவதால் குறிப்பிடுகிறேன்.

சில நாட்களுக்கு முன்னாள் BC வகுப்பை சேர்ந்த நண்பன் ஒருவனிடன் வாக்குவாதத்தின் போது கேட்க நேர்ந்த கேள்விகள்...

கேள்வி:இன்னைக்கு நீ படிக்கிறாய் என்றால் யார்காரணம்?

பதில்
: பெரியார்....

கேள்வி: அப்ப அம்பேத்கர்???

பதில்:தலித்துக்கு போராடினார்..

கேள்வி:இந்து உன் மதமா?

பதில்:இல்லையா?

கேள்வி:ஒ...சாதி எங்கிருந்து வந்தது?

பதில்:தெரியாது...

கேள்வி
:இதை எல்லாம் ஏன் தெரிந்து வைத்து கொள்ளவில்லை?

பதில்:தெரிந்து நான் என்ன பண்ண போறேன்?தெரிஞ்சுகவேண்டிய அவசியம் இல்லை ...

நான்:டேய் வரலாற்றை,வந்த பாதையை தெரிஞ்சிக்கணும்...

பதில்:அப்படி ஒன்னும் எனக்கு அவசியம் இல்லை..

பேச்சு அங்கே சுத்தி இங்க சுத்தி இன உணர்விற்கு வருகிறது..
இன உணர்வே வேண்டாம் என்பது அவன் வாதம்.சரி அதற்க்கு மேலே எனக்கு பேச விருப்பம் இல்லை
..
மற்றொரு நண்பரிடம் ஈழ தமிழர் விடுதலை குறித்து பேசியபோது..(முத்துகுமரன் உயிர் தியாகத்திற்கு பின்னர்)

நான்:முத்துகுமரனின் கடிதத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நண்பர்:கொண்டு சேர்த்தால் மட்டும் விடுதலை கிடைத்துவிட போகிறதா?

பகத்சிங்கும்,பெரியாரும்,அம்பேத்கரும் இப்படி இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் இல்லையா?

எங்கு இருந்து வந்தது இந்த மனநிலை?

இங்க எனது பார்வையில் நான் உணர்ந்தவற்றை மட்டும் சொல்கிறேன்.
தொண்ணூறுகளுக்கு முன்னாள் போராட்ட மனோபாவம் இருக்கவே செய்தது...ஆனால் சரியாக 92 என்று நினைகிறேன்...முதல் குட்டி சாத்தான்...sun தொலைக்காட்சி கால் எடுத்து வைக்கிறது.அதுவரைக்கும் ,வயலும் வாழ்வு பாக்கவும்,என்னைக்காவது போடப்படும் திரைப்படம் பார்க்கவும் உட்கார்ந்த மொத்த கூட்டமும்...தொல்லை காட்சியால் கட்டுக்குள் இருக்கப்படுகிறது.
அதுக்கு முன்னால் குழந்தைகள் கூடி விளையாடுவது,அதன் மூலம் பரஸ்பரம் அன்புகள் வளர்ந்து வந்தது.தொல்லை காட்சியில உக்காந்த பிறகு ..எல்லாமே மாறுகிறது.மனோ நிலையின் முதல் மாற்றம் இங்க தான்..

உலகமயமாக்கல் எனும் விஷம்.....

உலகமயமாக்கல் எனும் பூதம் என்னவெல்லாம் பண்ணியது தெரியுமா????

1)சிறுதொழில் அழிப்பு

2)கலாச்சார திணிப்பு

3)முதலாளித்துவ கொள்கை மூலமா ...வறுமை அதிகரிப்பு....

வேலை வாய்ப்பு அதிக படுத்தபடுகிறது உலக மயமாக்கல் மூலமாக அப்படின்னு ஒரு பார்வை உள்ளது.இதை பற்றி எனக்கு முழுவதும் தெரியல ..ஆனா கேள்விகள் பல உள்ளன.

1)இங்கு விற்பனை ஆகும் அனைத்து அந்நிய பொருட்களும்,அதன் உதிரி,உருவாக்க தேவையான அனைத்தும் இங்கேயே தயார் செய்ய படுகின்றனவா?

2)நெசவு செய்து கொண்டு இருந்தவர்களுக்கு என்ன மாற்றுவேலையை இந்த உலகமயமாக்கல் கொடுத்தது?

3)இந்த உலகமயமாக்கல் மூலம் அந்நிய தயாரிப்பளர்களை உள்ளே விட்ட காரணத்தால் ..சிறு தொழில் செய்துகொண்டு இருந்தவர்கள் தொழிற்புரட்சி அடைந்துவிட்டு ..அந்நிய நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவிற்கு வளர்ந்துவிட்டனரா?

4)இந்த நிறுவங்களில் இலாபதொகையில் எத்துனை சதவீதம் இந்தியாவிலேயே சுழற்றபடுகிறது?

இதை கேட்க்கும் போது இன்னொன்னும் சொல்லிகிறேன் ...நீயா?நானா? கோபி சொல்கிற மாதிரி எந்த அளவுக்கு உலகமயமாக்கல் நல்லதை செய்ததோ ..அதே அளவு கெட்டதையும் செய்தது...
நான் சொல்வதாய் இருந்தால் கொஞ்சம் அதிகமாகவே கெட்டதை செய்தது.அதை தான் பிழைப்புவாத மனோபாவ மாற்றம் அப்படின்னு சொல்லலாம்.

கைல வச்சு எண்ணி பார்க்க முடியாத அளவு பணம்,வீடு,கார்....எல்லா சொகுசு பொருட்களையும் வாங்கும் அளவுக்கு பணபலம்.
என்ன ஆகுது?
எல்லாம் மாறுது...தான் என்னும் அகந்தை.பெற்ற தாயை வீடு வேலைகாரி என அறிமுக படுத்தக்கூடிய மனோபாவம்.

"திறமை இருக்கிறது பிழைக்கிறோம் அப்படின்னு சொல்லிக்கிறான்"..அப்படினா வயலில் உழைப்பவனுக்கு திறமை இல்லையா?

போர் என்றால் மக்கள் சாவது இயல்புதானே என்ற அறிக்கையை ஆமாம் போட்டு ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் இருக்கிறோம் இன்று.

இல்லை நாங்களும் பண்ணுறோம்...அநாதை இல்லத்திற்கு போறோம்,அது பண்ணுறோம் இது பண்ணுறோம் அப்படின்னு சொல்லுறீங்களா?உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம் தான் ..ஆனால் நீங்கள் சிறுபான்மையினர் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

நீயா,நானா நிகழ்ச்சியில் ஒரு பெரியவாள் சொன்னாரே ...கும்பகோணம் தீவிபத்தில் இறந்து போன அத்துனை பேரும் போன ஜென்மத்தில்

பாவம் செய்தவாள் என்று ..உங்களை சுற்றி ஒரு பெரிய கூட்டம் அப்படித்தான் இருக்கிறது.

மேலும் ஒருகணம் யோசித்து பாருங்கள் ..உங்கள் தகுதிக்கு ஏற்பதான் செய்கிறீர்களா???
அனாதைகளுக்கு செய்தால் புண்ணியம் என்ற மனோநிலையில் செய்கிறீர்களா?இல்லை, என்னைப்போல அவனும் ஒருவன்(எண் சகோதரன்,சகோதரி) என செய்கிறீர்களா?.

பணத்தால் மட்டும் செய்யாதீர்கள்...உங்கள் நேரப் பகிர்வுகளாலும் செய்யுங்கள்.

என் சகோதரன்,சகோதரி அங்கே சாகிறான்...இங்கோ நடைபிணமாய் வாழ்கிறான்..

எவன் என்ன ஆனால் எனக்கென்ன? எப்படி போனால் எனக்கென்ன?