18 Mar 2009



வெள்ளத்தில் கரையாதது நினைவுகள் -2


முதல் பகுதியை படிக்க...

என்றும் இல்லாதபடிக்கு அதிகப்படியான கலவரம் அப்பாவின் முகத்தில் ....வார்த்தைகள் அம்மாவை நோக்கி ....ஒவ்வொரு நொடிக்கும் கதவின் அடித்துவாரத்தில் வந்து நிறையும் தண்ணீரின் அளவு கூடுவது நன்றாகவே தெரிந்தது .

இறுதியாக சாவி கிடைத்தது..கதவு திறந்தவுடன் கதவை முட்டிக்கொன்று இருந்த தண்ணீர் சரேல் என்ன உள்ளே பாய நிலைகுலைந்து தான் போனேன் ..நல்லவேளை வெளிப்புறத்தில் தண்ணீர் இடுப்பளவே இருந்த காரணத்தால் அதிகப்படியான விசை இல்லை.

கதவில் இருந்து வலது புறம் இருக்கும் மாடியின் படிகட்டை நோக்கி நாங்கள் நகர்த்தல் ஆனோம்.தங்கை யார் கையில் இருந்தாள் என்பது நினைவு இல்லை ..நான் அப்பாவிற்கு பின்னர் கடைசியாக படிகளில் ஏறினேன்.

இரண்டாவது படியில் இருந்த தண்ணீர் நான் நான்காம் படிக்கு செல்லும் முன்னர் மூன்றாம் படியை நிரப்பி இருந்தது ...

படிகளில் சற்று பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு ஆரோக்கிய அருள்ராஜ் மாமாவின் வீட்டு சன்னலை நோக்கி அப்பா கத்தலானார்.சிறிது நேரத்திற்கு பின்னர் பதில் வரவே அவர்களும் விரைவில் வெளிவரலானார்கள்.ஜானுக்கு என்னைவிட இருவயது குறைவு,செசிலுக்கு என் தங்கையின் வயது .

மாடிவந்த பிறகுதான் வடக்கு வீட்டு நினைவு வந்தது ..அப்பாவும் ,மாமாவும் கத்தலானார்கள் ..வெகு நேரத்திற்கு பின்னர் சுடலையாண்டி மாமா வீட்டில் இருப்பதாக பதில் வந்தது.

இடைப்பட்ட நேரத்தில் சவரிமுத்து மாமாவிற்கு சொல்லி ..ஷர்மியும்,பாஸ்டின் அண்ணாவும் நீந்தி வந்து படியேருவதை காண முடிந்தது ..ஜெயராசுக்கோ அப்போது வயது ஒன்று தான் இருந்து இருக்கும்(சரியாக நினைவு இல்லை)

எழுத்துக்களில் இவைகள் எளிதாக தோன்றலாம்..ஆனால் இருளிலும் தெரிந்த அந்த கலங்கிய தண்ணீர் பலரின் மனதில் பயத்தை கொண்டுவந்து இருந்தது.

ஓரளவு பாதுகாப்பாக இருந்த போதும் முழுவதுமான பாதுகாப்பை உணர இயலவில்லை.மாறாக தண்ணீர் மட்டம் முழவதும் வீட்டை விழுங்க கூடும் என்று மற்றும் உணர்ந்தோம்.

ஆகவே மொத்தமாய் அரோக்கிய அருள்ராஜ் மாமாவின் வீட்டில் நான்கு தூண்கள் வைத்து கட்ட பட்டு இருந்த உயரமான தண்ணீர் தொட்டிக்கு மாறுவது என முடிவு செய்தோம்.

சவரிமுத்து மாமா வீட்டில் இருந்து எங்கும் நகர்வது சாத்தியமற்றதாக இருந்தது.

எங்கள் வீட்டில் இருந்து மாமா வீட்டிற்கு உள்ள பத்தடி இடைவெளியானது இரண்டு சவுக்கு கம்பு பாலம் கொண்டு இணைக்க பட்டது.

முதல் ஆளாக நான் பாலத்தில் பயணமானேன்...உருண்டை வடிவிலான சவுக்கு கம்பு உருண்டுவிடாமல் இந்தப்புறம் அப்பாவும் அந்தபுறம் மாமாவும் பிடித்துக்கொள்ள ..பதினைந்து அடிக்கும் மேலான தண்ணீர் மட்டத்தில் மேலான ஒரு குறுகிய பாலத்தில் ..ஏழு வயது சிறுவனான எனது சவாலான பயணம் தொடங்கியது

குறிப்பு: இரண்டு பகுதிகளில் முடிக்கவேண்டும் என நினைத்தேன் ..முடியவில்லை வெள்ளத்திற்கு பிந்தைய நினைவுகளுடன் இன்னும் சில பகுதிகளாய் தருகிறேன்.

No comments: