19 Mar 2009



வெள்ளத்தில் கரையாதது நினைவுகள் -3

படிக்க:

பகுதி ஒன்று

பகுதி இரண்டு

தெம்பளிக்கும்
சில வார்த்தைகளுக்கு பின்னர் என்னை பாலத்தின்(?!) மீது அமர்த்தினார் என் அப்பா..உயிரை பணயம் வைத்து செய்யவேண்டிய பயணத்திற்கு என்னை அனுப்பும் முன்னர் எப்படித்தான் இருந்து இருக்கும் அவரின் மனநிலை?

முதல் முறை,இரண்டாம் முறை என இரண்டு முறை இடறல்கள்,முன்றாம் முறை ஏறக்குறைய விழுந்தே விட்டேன் என்றுதான் நினைதேன் ..ஏதோ அனிச்சை செயலாய் சவுக்கு கம்பை கட்டிகொண்டேன்.

முழுவதும் கடக்கும் முன்னர் மாமா என்னை முன்வந்து தூக்கி கொண்டார்.என்னை அடுத்து அம்மா,தங்கையோடு அப்பா என கடந்து வந்தனர்.ஆச்சியும்,தாத்தாவும் வந்ததாக நினைவில் இல்லை.

பின்னர் மாமாவீட்டின் தண்ணீர் தொட்டி தண்ணீர் முழுவதுமாக இறக்கப்பட்டு,எல்லோரும் தற்காலிகமாய் அதில் குடியேறினோம்.

தண்ணீர் அளவோ குறைந்தாபாடு இல்லை...

வேளாங்கண்ணி மாதாவிடம் வேண்டுதல்கள் ஆரம்பமாகின..நானும் அவர்களோடு வேண்டிகொண்டேன்.

அப்பாவும்,மாமாவும் நீர் மட்டத்தை கண்காணித்து வந்தனர்.

சில மணித்துளிகளுக்கு பிறகு தூரத்தில் இருந்து குரல்மட்டும் ஒலித்தது .."காப்பாத்துங்கள்..காப்பாத்துங்கள்" என்று...

அப்பாவும் மாமாவும் சொல்லிகொண்டனர் "பரமசிவம் ஆசிரியர் என்று.என் அப்பாவுடனும் ,மாமாவுடனும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அவர்.

அவரை காப்பாற்ற எந்த வித வழியும் இல்லாமால் அவரின் மரண ஓலத்தை கேட்டுக்கொண்டு இருந்த அப்பா,மாமா மற்றும் அவரை அறிந்த எங்கள் பகுதியை சேர்ந்த மற்றவர்களின் மனநிலை தான் எப்படி இருந்து இருக்கும்?

கடைசிவரை உயிரை காக்க கத்தி கத்தி கதறி,விரும்பாதவன்னம் தானும் தன்னோடு தன் குடும்பத்தையும் சேர்ந்து மரணம் அரவணைத்துக்கொண்ட கடைசி நிமிடங்கள் தான் எப்படி இருந்திருக்கும்?

என் நண்பன் "ஐயப்பனும்" அவர்களுள் ஒருவனாய் இருந்தானே..ஐயப்பன் பரமசிவம் ஆசிரியரின் மகன்.அன்று மாலையில் எனக்கு பேய்கதை சொன்ன ஐயப்பன்.

ஒரு இரவில் எல்லாம் முடிந்தது...காலையில் தண்ணீர் இடுப்பளவு என்ற அளவில் வடிந்தது.

மாரி அண்ணன் வீட்டில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட "மலைபாம்புகள்" இரண்டு சன்னலோடு தங்களை பிணைத்து இருந்தன.

யாருக்கும் இல்லாமல் தோசைகளும்,சப்பாத்திகளும்,மர பொருட்களும் மிதந்து கொண்டு இருந்தன.அப்பா என்னை முதுகில் அமர்த்தி மேடான சாலைக்கு என்னை கடத்தி கொண்டுவந்து சேர்த்தார்.

என் மீன் படம் போட்ட நோட்டு சகதியோடு ஐக்கியம் ஆகி இருந்தது..

குறிப்பு : வெள்ளத்திற்கு பின்பான சிறிய நினைவுகளுடன் அடுத்த பகுதியில் நிறைவு செய்கிறேன் கட்டுரையை.

No comments: